பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை


பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 29 March 2024 6:09 AM GMT (Updated: 29 March 2024 7:50 AM GMT)

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பில் கேட்ஸ் இடையே ஆலோசனை நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் 'டீப் பேக்' தொழில்நுட்பம் மக்களிடையே எளிதாக குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடும். உதாரணத்திற்கு எனது குரல் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம். இந்த 'டீப் பேக்' வீடியோ அல்லது ஆடியோ ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய நடைமுறைகளை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடியது, செய்யக்கூடாததை நாம் வரையறுக்க வேண்டும். இது போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பம் போதிய பயிற்சி இல்லாத நபர்களிடம் சென்றடையும்போது, அதை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து பில் கேட்ஸ் பேசுகையில், "ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளும், தீமைகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கக்கூடியது" என்று தெரிவித்தார்.


Next Story