டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கியாஸ் முககவசங்களுடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்


டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கியாஸ் முககவசங்களுடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்
x

டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கியாஸ் முககவசங்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


புதுடெல்லி,


டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் 4-வது பகுதியாக இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. நாட்டின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. காற்று தர குறியீடும் மோசமடைந்து உள்ளது.

இதனால், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறி விட்டது என ஆளும் ஆம் ஆத்மி அரசை பா.ஜ.க. தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. இதனால், சமீபத்தில் நடந்த டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் இரு கட்சிகளும் மோதி கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று நடந்த டெல்லி சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், கையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கியாஸ் முககவசங்களை அணிந்தபடியும் வந்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

இதுபற்றி எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2 கோடி டெல்லி மக்களின் குரலாக நான் இந்த கியாஸ் சிலிண்டரை ஏந்தி வந்திருக்கிறேன். மக்கள் காற்று மாசுபாட்டால், கியாஸ் அறைகளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்த ஆளும் ஆம் ஆத்மி அரசு, டெல்லியை காற்று மாசுபாட்டில் இருந்து விடுவிக்க என்ன செய்து உள்ளது? என தெளிவாக கூற வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

டெல்லி சட்டசபைக்கான எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பித்குரி, ஓ.பி. சர்மா மற்றும் அபய் வர்மா உள்ளிட்டோரும் இதேபோன்று அவைக்கு வந்தனர்.

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதன்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு இன்று காலை 337 ஆக பதிவாகி உள்ளது. இது மிக மோசம் என்ற அளவில் காணப்படுகிறது.

எனினும், டெல்லியில் கடந்த 6-ந்தேதி முதல் அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகள் மற்றும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை உள்பட காற்று மாசை குறைப்பதற்கான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்து இருந்தது.


Next Story