ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பது பா.ஜ.க.வுக்கு பிடிக்காது: ராகுல் காந்தி பேச்சு

ஆதிவாசிகளின் நிலங்களை பறித்து அவற்றை தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கி உள்ளது என சூரத் நகரில் பேசிய ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பது பா.ஜ.க.வுக்கு பிடிக்காது: ராகுல் காந்தி பேச்சு
Published on

சூரத்,

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணம் பின்பு கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் நீடித்து, பின்னர் மராட்டியத்திற்கு சென்றது. இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகருக்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பா.ஜ.க.வோ வனவாசிகள் என அழைக்கிறது.

அவர்களிடம் இருந்து, நிலங்களை பறித்து அவற்றை 2 முதல் 3 தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கி உள்ளது. ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பதற்கோ, அவர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

பழங்குடியினர் நலனுக்காக, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம். உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம் என்று இதற்கு முன்பு ஜல்கான் ஜமோத் என்ற இடத்தில் பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சியில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசும்போது ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com