எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு தொடர அனுமதி: ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பாஜக பதில்


எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு தொடர அனுமதி: ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பாஜக பதில்
x

எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், 2010 அக்டோபர் 21 ஆம் தேதியன்று டெல்லியில் நடந்த மாநாட்டில் சிலர் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக தெரிவித்திருந்தார். எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் உசைன் உள்ளிட்ட சில தலைவர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், 2010ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று திலக் மார்க் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பகைமையை தூண்டுதல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல், பொது தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புதல், தேசத்துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டுமானால் அரசின் அனுமதி பெறவேண்டும். இதற்காக மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அருந்ததிராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீதான 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்கப்படவில்லை. இதுதொடர்பான விளக்கத்தை துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சையத் அப்துல் ரஹ்மான் கிலானி ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவர்கள் காலமாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், "டெல்லி துணைநிலை ஆளுநரின் நிர்வாகத்தில் சகிப்புத்தன்மைக்கு இடமே இல்லை. கருத்துகளை முன்வைக்கும்போது அரசு சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் காட்ட வேண்டும். தண்டனைச் சட்டப்பிரிவு 124A (தேசத்துரோகம்) அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். வன்முறையை தூண்டுவதை சமாளிக்க போதுமான சட்ட விதிகள் உள்ளன" என கூறியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டுக்கு பாஜக நிர்வாகி அமித் மால்வியா பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தண்டனைச் சட்டம் 124A-ன் கீழ் (தேசத்துரோகம்) அருந்ததி ராய் மீது வழக்கு தொடர துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஏனெனில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் நிலுவையில் உள்ளது. மற்ற பிரிவுகளில், அதாவது 153 ஏ, 153 பி மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


Next Story