சித்தராமையா குறித்து பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்
சித்தராமையா குறித்து பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டை காங்கிரசார் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சிக்கமகளூரு:
சித்தராமையா மீது தாக்கு
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜனதா சார்பில் நடந்த ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி பேசினார். அப்போது அவர் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராைமயா குறித்து கடுமையாக பேசினார். அதாவது சித்தராமையா 'சித்தாமுல்லா கான்' என்று வர்ணித்தாா்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சிக்கமகளூரு மாவட்ட காங்கிரசார் முடிவு செய்தனர்.
சி.டி.ரவி வீட்டை...
அதன்படி நேற்று சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாஸ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் தலைமையில் காங்கிரசார் சி.டி.ரவி வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக ெசன்றனர். பசவனஹள்ளியில் உள்ள சி.டி.ரவி வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியினர் வந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் சி.டி.ரவி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.
ஓம்காரேஸ்வரா கோவில் பகுதியில் வைத்து காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்தனர். அப்போது பா.ஜனதாவினரும் அங்கு திரண்டு வந்து போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காங்கிரசுக்கு எதிராகவும், சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காங்கிரசார் மற்றும் பா.ஜனதாவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அந்தப்பகுதியில் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராகவும், சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அப்போது போலீசார், காங்கிரசாரை கலைந்து செல்லும்படி கேட்டனர். அதற்கு மறுத்த காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் வந்து, காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.