பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கர்நாடகம் வருகை


பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 15 Dec 2022 2:42 AM IST (Updated: 15 Dec 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் கொப்பல் உள்பட 10 மாவட்ட கட்சி அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.

பெங்களூரு:-

ஜே.பி.நட்டா வருகிறார்

கர்நாடகத்தில் கொப்பல், பல்லாரி, ராய்ச்சூர், பீதர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கோலார், சாம்ராஜ்நகர், ஹாவேரி மற்றும் கதக் ஆகிய 10 மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியின் அலுவலக கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா கொப்பலில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கர்நாடகம் வருகிறார். அவர் கொப்பல் விழாவில் கலந்து கொண்டு கொப்பல் பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அத்துடன் 9 மாவட்ட கட்சியின் அலுவலகங்களை காணொலி மூலமும் திறந்து வைக்கிறார். மேலும், விஜயநகர், குடகு, உத்தரகன்னடாவில் பா.ஜனதா அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.

இந்த விழாவில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். புதிய அலுவலகங்களில் மாவட்ட தலைவர் அலுவலக அறை, நூலகம், தகவல் மையம், ஊடக அறை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அறை, சேமிப்பு கிடங்கு, சமையலறை, உணவு சாப்பிடும் அறை, கூட்ட அரங்கு, ஒருங்கிணைப்பு குழு அரங்கு, தங்கும் அறைகள், ஒரே இடத்தில் அதிகம் பேர் தங்கும் அறை, வாகன நிறுத்தும் இடம் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. அதிவேக இணைய வசதி, வை-பை, தானியங்கி மின்தூக்கி, டிஜிட்டல் நூலகம் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எடியூரப்பா அதிருப்தி

ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு கொப்பலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள எடியூரப்பாவுக்கு நேற்று மதியம் வரை அதிகாரபூர்வமாக அழைப்பிதல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். கட்சியில் அவரை முழுமையாக ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர். எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து உஷாரான பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்து சென்று விழா அழைப்பிதழ் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story