இமாச்சலப் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் - அனுராக் தாக்கூர்
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியமைத்ததைப்போன்று குஜராத், இமாசலப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என மத்திய விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததைப்போன்று குஜராத், இமாசலப் பிரதேசத்திலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இதனையத்து ராஜஸ்தானில் அதிகரித்து வரும் மதமாற்ற சம்பவங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அனுராக் சிங் தாக்கூர், ராஜஸ்தானில் இரு தலைவர்களுக்கு இடையேயான அரசியல் போட்டி மாநிலத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார். மேலும் ராஜஸ்தானில் பெண்கள், தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் அனுராக் தாக்குர் கூறினார்.