கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 100 சதவீதம் வெற்றி பெறும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 100 சதவீதம் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளன. அங்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முடிவு வரும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்கள் நல்லாட்சி மற்றும் நிர்வாகத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் அரசு மீது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு கிடையாது என்பதை இந்த கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் ஆளும் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற உள்ளது. ஒட்டுமொத்த நாடே பிரதமர் மோடியின் தலைமையை ஆதரிக்கிறது. குஜராத்தில் முதல் முறையாக ஆளுங்கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை. 7-வது முறையாக அங்கு மக்கள் ஆளும் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். மக்கள் பா.ஜனதாவின் நிர்வாகம், அதன் தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி மீது வலுவான நம்பிக்கையை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.அதே போல் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் நல்ல முடிவு வரும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 100 சதவீதம் வெற்றி பெறும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.