சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெறும்


சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெறும்
x
தினத்தந்தி 18 March 2023 6:00 AM GMT (Updated: 18 March 2023 6:00 AM GMT)

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

சிக்கமகளூரு-

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

விஜயசங்கல்ப யாத்திரை

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன.இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் யாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிக்கமகளூருவில் பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தனர்.இதையடுத்து சிக்கமகளூரு பகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணி, ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடக மாநிலத்தை மாற்றியமைக்கும் வேளையில் ஈடுபட்டு உள்ளனர். மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

காங்கிரஸ் கட்சியினர் பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை வைத்து பொதுமக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகிறார்கள். இதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

நிகழ்ச்சியில் சி.டி.ரவி எம்.எல்.ஏ பேசுகையில் கூறியதாவது:-

நான் சிக்கமகளூரு தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறேன். இதனால் நான் எங்கு சென்றாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நான் தொகுதிக்கு நல்லது செய்பவன். எந்த இடத்திலும் சாதியை பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரசார் பொய்யான தகவலை கூறி வருகிறார்கள்.

4 முறை எம்.எல்.ஏ.

ஆனால் நான் அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை. சிக்கமகளூரு தொகுதியில் 4 முறை மக்கள் என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர். தத்தா பீடத்திற்கு அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தினர். நான் சொன்னது போல் அர்ச்சகர் அங்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் ஆசி எனக்கு எப்போதும் உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story