இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - அமித்ஷா நம்பிக்கை


இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - அமித்ஷா நம்பிக்கை
x

இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கராவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?.

பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது. உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story