மங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு


தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

மங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என்பதும், இது பயங்கரவாத செயல் என்ற போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் அடையாளமும் தெரியவந்துள்ளது.

மங்களூரு:

மங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என்பதும், இது பயங்கரவாத செயல் என்ற போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் அடையாளமும் தெரியவந்துள்ளது.

ஆட்டோவில் வெடி விபத்து

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.அந்த ஆட்டோவில் பின் இருக்கையில் ஒரு பயணி மட்டும் இருந்தார். டிரைவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அந்த ஆட்டோ நாகுரி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது.

ஆட்டோவில் இருந்த பொருள் வெடித்து சிதறியதன் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆட்டோவின் பின்பகுதி இருக்கை பயங்கரமாக எரிந்து சின்னாபின்னமாகி கிடந்தது.

படுகாயம்

ஆட்டோவில் பயணித்து வந்த பயணியும், டிரைவரும் படுகாயம் அடைந்திருந்தனர். அதில் பயணி கை துண்டான நிலையில் பலத்த தீக்காயம் அடைந்திருந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வெடிவிபத்துக்கு உள்ளான ஆட்டோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு குக்கர் இருந்தது. அந்த குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால் குக்கர் எப்படி வெடித்தது, ஆட்டோவில் வெடி பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்பட்டதா என போலீசார் ஆய்வு செய்தனர்.

பேட்டரிகள், வயர்கள்...

இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வெடிவிபத்துக்கு உள்ளான ஆட்டோ, குக்கர் ஆகியவற்றையும் கைப்பற்றி பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதாவது குக்கர் வெடிகுண்டை ஆட்டோவில் பயணித்த பயணி எடுத்து வந்துள்ளார். அந்த குக்கர் வெடிகுண்டுதான் வெடித்து இருப்பதை வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்தனர்.

மேலும் வெடித்து சிதறிக்கிடந்த குக்கரின் பாகங்கள், 4 பேட்டரிகள், நட்டுகள், போல்ட்டுகள், ரப்பர்கள், வயர்கள், டைமர், சர்க்கியூட் போர்டு மற்றும் சில மின்னணு உதிரி பாகங்களை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றினர்.

அப்பகுதி முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். இதுபோல் போலீசாரும், போலீஸ் துறையில் உள்ள பிற பிரிவினரும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

தடயங்களை கைப்பற்றினர்

தற்போது கைப்பற்றப்பட்ட தடயங்களை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதுபோல் சம்பவ இடத்தில் தடய அறிவியல் பிரிவினரும் தடயங்களை கைப்பற்றி உள்ளனர். அவர்களும் அந்த தடயங்களை ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர். சில முக்கிய பாகங்களை ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மங்களூருவில் உயர் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்

மங்களூருவில் நடந்தது குண்டுவெடிப்பு சம்பவம் தான். அது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது எதேச்சையாக நடந்த விபத்து அல்ல. இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். மிகப்பெரிய பயங்கரவாத செயலை ஏற்படுத்த நடந்த முயற்சி. மத்திய உளவுத்துறை மற்றும் விசாரணை அமைப்புகளுடன் சேர்ந்து கர்நாடக மாநில போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

போலீஸ் மந்திரி பேட்டி

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து மாநில போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்டோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் சனிக்கிழமை(நேற்று முன்தினம்) மாலையில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் கங்கனாடி போலீஸ் நிலையம் அருகே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு நடந்த ஆட்டோவில் பயணித்து வந்தவர், அப்பகுதியில் இறங்க திட்டமிட்டு இருந்திருக்கிறார். அவர் ஆட்டோவில் இருந்து இறங்கும் வேளையில்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்கள் 2 பேருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தற்போது அவர்கள் 2 பேரும் பேச முடியாத நிலையில் உள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி இச்சம்பவத்தில் மிகப்பெரிய கூட்டுச்சதி உள்ளது. இதில் ஈடுபட்டவர்களின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன.

டெட்டனேட்டர் வெடிகுண்டு

இச்சம்பவம் குறித்து மத்திய விசாரணை அமைப்புகளுடன் சேர்ந்து கர்நாடக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இச்சம்பவம் குறித்த முழு தகவலும் வெளிவரும். இது குக்கர் வெடிகுண்டா?, டெட்டனேட்டர் வெடிகுண்டா? என்பது முழுமையாக தெரியவில்லை. ஆனால் குக்கரில், பேட்டரிகள், டைமர், டெட்டனேட்டர் உதவியுடன் இந்த டைமர் வெடிகுண்டு தயார் செய்யப்பட்டு இருக்கிறது. வயர்களும், பேட்டரிகளும் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய உந்துசக்திபோல பயன்படுத்தப்பட்டு இருப்பதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆட்டோவில் பயணித்த நபர், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், தமிழ்நாடு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

தவறான முகவரி

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆட்டோவில் பயணித்த பயங்கரவாதியிடம் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் தார்வார் மாவட்டம் உப்பள்ளியைச் சேர்ந்த பிரேம்ராஜ் ஹுடகி என்று தெரிவித்து இருந்தார். மேலும் தான் மைசூரு டவுன் மேட்டுகள்ளி பகுதியில் உள்ள தனது அண்ணன் பாபுராம் என்பவருடன் வசித்து வந்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து உப்பள்ளியிலும், மைசூருவிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உப்பள்ளியில் அவர் கூறியிருந்த முகவரி தவறானது என்பதையும், பிரேம்ராஜ் ஹுடகி என்பவர் துமகூரு ரெயில்வே ஊழியர் என்பதையும், அவருக்கும் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்பதும் போலீசார் கண்டுபிடித்தனர்.

அதுபோல் மைசூருவில் போலீசார் நடத்திய விசாரணையில் பாபுராம் என்பவருடன் பயங்கரவாதி ஒரு மாதம் மட்டுமே தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் பாபுராமுக்கு, தம்பி யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பாபுராமுடன் அந்த பயங்கரவாதி மர்மமான முறையில் இருந்துள்ளார்.

முன்னுக்குப்பின் முரணான தகவல்

அவரது நடவடிக்கைகளும் மர்மமாக இருந்துள்ளன. பாபுராம் இதுபற்றி கேட்டதற்கு தான் பெங்களூருவில் இருந்து வந்திருப்பதாகவும், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், தற்போது மைசூருவில் வேலை தேடி வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாலும், அவர் கூறிய தகவல்கள் பொய்யாக இருப்பதாலும், அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி குண்டு வெடித்து தீப்பிடித்ததால் அவரது முகம், உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 60 சதவீத தீக்காயங்கள் இருப்பதால் அவரை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவரது பெயர், விவரங்கள் போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை.

அடையாளம் தெரிந்தது

சிவமொக்காவில் 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி வீரசாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில் நடந்த வன்முறையில் தொடர்பு கொண்டு தலைமறைவாக இருந்த சிவமொக்கா தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தை சேர்ந்த ஷாரிக் தான், இவரா? என போலீசார் சந்தேகித்தனர்.

இதனால் அவரது குடும்பத்தினரை வரவழைத்து போலீசார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நபரை காண்பித்தனர். அவர்கள், அந்த நபர் ஷாரிக் தான் என்று அடையாளம் காட்டியதாகவும், இதனால் மங்களூரு குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டது ஷாரிக் தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு ெதாடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவையை போல் சதிதிட்டம்?

மேலும் அவர் 10-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தியதும், அவர் பயன்படுத்திய ஒரு சில சிம்கார்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் யார், யாருடன் பேசினார். அவருக்கும், கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா?, கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சதிதிட்டம் போல் மங்களூருவிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேர்களிடமும், இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் மங்களூரு மாநகரில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட போலீஸ் துறையில் உள்ள அனைத்து பிரிவினரும் மங்களூருவுக்கு விரைந்தனர். மேலும் பெங்களூருவில் இருந்து உளவுத்துறையினரும், தேசிய புலனாய்வு முகமை குழுவினரும்(என்.ஐ.ஏ.) மங்களூருவுக்கு விரைந்தனர்.

இதற்கிடையே மங்களூரு மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மாநகரில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

தீவிர தேடுதல் வேட்டை

இதுதவிர தட்சிண கன்னடா மாவட்ட எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். குறிப்பாக தட்சிண கன்னடாவையும், கேரளாவையும் இணைக்கும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் போலீசார் சந்தேக நபர்கள், ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ரவுடிகள், பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என பலரையும் தீவிரமாக தேடிப்பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் பிடித்து இருந்தனர். அவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரித்து வருகிறார்கள்.

இதுதவிர சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ரவுடிகள், பயங்கரவாதிகளுக்கு ஏதும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா?, அதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசாரும், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.


Next Story