சார்மடி வனப்பகுதியில் வெடிகுண்டு சோதனையா?
சாட்டிலைட் போன் பயன்பாடு குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சார்மடி வனப்பகுதியில் வெடிகுண்டு சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மங்களூரு-
சாட்டிலைட் போன்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக் பற்றி தினந்தோறும் புதிய, புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மங்களூருவில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முந்தைய நாள், அதாவது கடந்த 18-ந்தேதி பெல்தங்கடி தாலுகா தோட்டாடி கிராமத்தின் அருகே உள்ள பெண்ட்ராலா வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மங்களூரு குண்டுவெடிப்புக்கும், சாட்டிலைட் போன் பயன்பாட்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வனப்பகுதியில் சோதனை
இந்த நிலையில் மங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தானந்தா தலைமையில் தர்மஸ்தலா போலீசார், உள்துறை பாதுகாப்பு குழுவினர் நேற்று சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்ட பெண்ட்ராலா வனப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அந்த வனப்பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் கூறுகையில், சாட்டிலைட் போன் பயன்பாடு குறித்து பெல்தங்கடி வனப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் போலீசாருக்கு அங்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஆனாலும் உள்ளூர்வாசிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார்.
வெடிகுண்டு சோதனையா?
இதற்கிடையே சிக்கமகளூரு மாவட்ட எல்லையில் உள்ள சார்மடி வனப்பகுதியிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் உள்ளூர் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
முதலில் யானைகளை துப்பாக்கி மூலம் சுட்டு விரட்டியதாக நினைத்தோம். ஆனால் துப்பாக்கி குண்டு சத்தத்தை விட அதிகம் சத்தம் வந்தது. இதனால் அங்கு குண்டு வெடித்திருக்கலாம் என நினைக்கிறோம் என அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக சார்மடி மலைப்பாதையிலும் வெடிகுண்டு சோதனை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் சார்மடி வனப்பகுதியிலும் போலீசார் சோதனை நடத்தினர்.