சுயசரிதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள்; புத்தக திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு


சுயசரிதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள்; புத்தக திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு
x

சுயசரிதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள் என்று ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கூறியுள்ளார்.

பெங்களூரு:

சுயசரிதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள் என்று ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு கூறியுள்ளார்.

புத்தகங்கள் விற்பனை

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரிகள் ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தமிழ் புத்தக திருவிழா தொடக்க விழா கடந்த 25-ந் தேதி பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

இந்த திருவிழாவில் 25 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிகமாக தமிழ் புத்தகங்களே இடம்பெற்றுள்ளன. அனைத்து வகையான புத்தகங்களும் இருக்கின்றன. சிறுவர்கள், சிறுமிகளுக்கான புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் உள்பட பிரபலமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எழுத்தாளர்கள்

பெங்களூரு மட்டுமின்றி மைசூரு உள்ளிட்ட மாநிலத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தமிழர்களும் ஆர்வமாக வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடி எடுத்து வாங்கி செல்கின்றனர். புத்தகங்கள் மீது 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிந்தனைக்களம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் எழுத்தாளர்கள் மற்றும் பிரபலமானவா்கள் வருகை தந்து தங்களின் கருத்துகளை பகிா்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமின்றி புதிய புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் இந்த புத்தக திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. நேற்று கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தமிழ் ஆசிரியை கார்த்தியாயினி நடத்தினார். இதில் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சிந்தனைக்களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியும், கவிஞருமான நாகூர் ரோஜா, ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் தங்களின் கருத்துகளை பகிா்ந்து கொண்டனர். கவிஞர் நாகூர் ரோஜா பேசும்போது கூறியதாவது:-

உச்சரிக்க வேண்டும்

தமிழ் புத்தகங்களை நாம் அதிகமாக படிக்க வேண்டும். எனது கொள்ளுப்பாட்டி பேசிய நிறைய சொற்கள் எனக்கு தெரியாது. எல்லோருக்கும் இந்த நிலை தான். நமது மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். எல்லா மொழிகளையும் கற்கலாம். ஆனால் வீட்டில் நமது தாய்மொழியை தான் பேச வேண்டும். தாய்மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும்.

எனது தாத்தா அப்துல் கலாம் தொடக்க கல்வியை தமிழில் தான் படித்தார். அதன் பிறகு தான் ஆங்கிலத்தை கற்றார். தமிழில் ஆரம்ப கல்வியை படித்ததால் தான் அவர் நிறைய எழுதினார். நமது தாய்மொழியை நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்?. நமது இயல்பான மொழியில் நாம் பேசுவோம். நான் இங்கு புத்தகம் வாங்குபவராக வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு நாகூர் ரோஜா கூறினார்.

அக்னி சிறகுகள்

அதைத்தொடர்ந்து ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:-

அனைவரும் புத்தகங்களை வாங்கி படியுங்கள். மாதம் ஒரு புத்தகம் வாங்கி படியுங்கள். இப்படி தான் எனது புத்தக பயணம் தொடங்கியது. இன்று நான் புத்தகங்களுடன் தான் பயணிக்கிறேன். எனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. புத்தகங்கள் மனிதர்களை அழகாக்குகிறது. புத்தகங்கள் வாசிப்பவர்களின் முகத்தில் புத்துணர்ச்சியை பார்க்க முடியும். புத்தகங்கள் நமது உள்ளங்களை மட்டுமின்றி நமது வீடுகளையும் அழகாக்குகிறது.

நான் கல்லூரியில் படித்தபோது, அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்தேன். அப்போது நானும் விஞ்ஞானி ஆவேன் என்று நினைத்தேன். அதே போல் நான் இன்று விஞ்ஞானி ஆகியுள்ளேன். நான் வடசென்னையில் ஒரு குடிசை பகுதியில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு ஆங்கிலம் பேச வரவே வராது. சாதாரண தமிழ் பள்ளியில் தான் படித்தேன். ஆனால் இன்று நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். நான் சுயசரிதை புத்தகங்களை தேடி படிப்பேன்.

அறம் போதிக்க வேண்டும்

அவர்களின் 80 ஆண்டு கால அனுபவத்தை நம்மால் 2 மணி நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் முதலில் சுயசரிதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அது உங்களுக்கு உதவும். இஞைர்களை தமிழை நோக்கி இழுத்து வர வேண்டும். நமது குழந்தைகளை வாசிக்க தூண்ட வேண்டும். எல்லா நிகழ்ச்சிகளிலும் தமிழ் புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்.

கண்ணதாசனின் வனவாசம், ஜெயகாந்தனின் ஒரு அரசியல்வாதியின் அனுபவங்கள் போன்ற பல்வேறு புத்தகங்களை படித்தேன். சிந்திப்பவர்கள் எல்லோரும் எழுதுவது இல்லை. ஆனால் எழுதுகிறவா்கள் அனைவரும் சிந்திக்கிறார்கள் என்று ஒரு கவிஞர் கூறினார். நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும். அறம் போதிக்க வேண்டும். தாய்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். அதை நாம் செய்தால், மற்றவற்றை அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது நமது வாழ்வியல் நெறி. இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். அத்தியாவசிய பட்டியலில் புத்தகங்களும் இணைய வேண்டும்.

இவ்வாறு டில்லிபாபு பேசினார்.

புத்தக திருவிழாவில் இன்றைய நிகழ்ச்சிகள்

பெங்களூருவில் நடைபெற்று வரும் தமிழ் புத்தக திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பட்டிமன்றம் நடக்கிறது. விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு ஆகியோரின் புத்தகங்களில் பெரிதும் விஞ்சி நிற்பது எது என்ற பெயரில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு சிந்தனைக்களம் நடக்கிறது. இதில் கர்நாடக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகிறார்.


Next Story