சரத் பவாரை மந்திரவாதி எனக்கூறுவதா? பாஜக தலைவர் மீது போலீசில் தேசியவாத காங். புகார்
சரத்பவாரை மந்திரவாதி என கூறிய பா.ஜனதா தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புகார் அளித்து உள்ளது.
தானே,
பா.ஜனதா மாநில தலைவர் சத்தாராவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் " ஒருவர் ஒருமுறை சரத்பவார் வலையில் விழுந்தால் அவரிடம் இருந்து தப்பிக்க முடியாது. சூனியம் வைப்பது போன்ற சம்பவம் 2019-ல் நடந்தது, அதில் உத்தவ் தாக்கரே விழுந்துவிட்டார். தேசியவாத காங்கிரஸ் அந்த சூனியத்தை உத்தவ் தாக்கரே மீது வைத்தது. இதனால் அவரது சிந்தனை திசைதிருப்பட்டது. " என கூறியிருந்தார்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே தானே கடக்பாடா போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் சரத்பவாரை சூனியக்காரர் (மந்திரவாதி) என கூறிய பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே மீது மாந்திரீக, மந்திர, நரபலி தடுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சந்திரசேகர் பவன்குலே மீது புகார் வந்து இருப்பதை தானே போலீசார் உறுதிப்படுத்தினர். எனினும் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.