ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அதிகாரி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஓய்வு ெபற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அதிகாரி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அதிகாரி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ரூ.9 ஆயிரம் லஞ்சம்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்தவர் சித்தராஜ். மாற்றுத்திறனாளியான இவர் எச்.டி.கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் சித்தராஜ் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். இந்த நிலையில் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற எச்.டி.கோட்டை தாலுகா கல்வி அலுவலகத்தில் சித்தராஜ் விண்ணப்பம் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வட்டார கல்வி அதிகாரி சந்திரகாந்த், கல்வி அலுவலக அதிகாரி சங்கர், ஊழியர் ரவி ஆகியோர் சித்தராஜூவிடம் ஓய்வூதியம் கிடைக்க தங்களுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
அதன்படி 3 பேருக்கும் அந்த ஆசிரியர் ரூ.9 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து இருந்தார். 3 பேரும் லஞ்சம் வாங்கிய போது அவர்களை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மைசூரு கேர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் 3 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி, மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கியது எதிர்பார்க்க முடியாத சம்பவம் என்று கூறியதுடன் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






