வங்காளதேச எல்லையில் சிக்கிய 41 கிலோ தங்கக்கட்டிகள்
வங்காளதேச எல்லையில் 41 கிலோ தங்கக்கட்டிகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லைப்பகுதியான குனார்மத் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள இச்சாமதி ஆற்றில் நாட்டுப்படகு ஒன்று வங்காளதேசத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே அதை இடைமறித்த வீரர்கள் அதில் சோதனையிட முயன்றனர். ஆனால் அதில் இருந்தவர்கள் வீரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் போக்கு காட்டினர்.
ஆனால் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக முன்னேறி படகுக்கு அருகே சென்றனர். உடனே அதில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து மீண்டும் வங்காளதேச பகுதிக்கு சென்றுவிட்டனர்.
பின்னர் அந்த படகை வீரர்கள் சோதனையிட்டனர். அப்போது அதில் 41.49 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 24 காரட் தங்கக்கட்டிகளாக இருந்த அவற்றின் மொத்த மதிப்பு ரூ.21.22 கோடி என கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த வீரர்கள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்காளதேச எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தங்க வேட்டை இதுவாகும்.