வீரசாவர்க்கர் 'புல்புல்' பறவையில் பறந்து வந்ததாக குறிப்பிட்டது வெறும் உருவகம்தான்: எழுத்தாளரின் மனைவி விளக்கம்
கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் வீரசாவர்க்கர் 'புல்புல்' பறவை மீது அமர்ந்து பயணித்தார் என்பது வெறும் உருவகம் தான் என்று எழுத்தாளரின் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அரசின் பள்ளி பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு கன்னட புத்தகத்தில் வீரசாவர்க்கர் குறித்த வரலாறு இடம் பெற்றுள்ளது. அந்த வரலாற்றில், "வீரசாவர்க்கர் அந்தமானில் சாவி துவாரம் கூட இல்லாத சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர், 'புல்புல்' பறவை அவரது அறைக்கு வரும். அதில் வீரசாவர்க்கர் அமர்ந்து தினமும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தை எழுத்தாளர் கே.டி.கட்டி என்பவர் எழுதி இருக்கிறார். வீரசாவர்க்கர் குறித்த இந்த கருத்துக்கு கடும் விமர்சனம் எழுந்தது. மாநில அரசுக்கு எதிராகவும் எழுத்தாளர்கள் கருத்துகளை வெளியிட்டனர். இதுகுறித்து தேசிய அளவிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு விளக்கம் அளித்த அந்த எழுத்தாளர் கே.டிகட்டி, "வீரசாவர்க்கர் குறித்த கருத்து கற்பனையில் எழுதப்பட்டதாகவும், அது பறவையில் பயணித்தார் என்பது வெறும் உருவகம் தான்" என்றார். இந்த நிலைியல் கே.டி.கட்டியின் மனைவி யசோதா அம்மம்பலா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த விவகாரத்திற்கு எனது கணவர் விரிவான விளக்கம் அளிக்கும் நிலையில் இல்லை. இந்த விவகாரத்தில் வீரசாவர்க்கர் குறித்து எனது கணவர் உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து விளக்கம் அளிக்காததால் அதிக குழப்பம் ஏற்பட்டுள்ளது. அது எழுத்தாளரின் மிகைப்படுத்திய பார்வையாகவோ அல்லது கருத்து சேர்க்கும் பிரிவில் நடந்த தவறாகவோ இருக்கலாம்.
இந்த சர்ச்சை குறித்து எங்களின் நலம் விரும்பிகள் பலர் தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்கிறார்கள். இந்த விவகாரம் வெளியாகும் வரை எனது கணவரின் கருத்து பாடத்திட்டத்தில் இடம் பெற்றது தெரியாது. எனது கணவரை பற்றி நன்கு அறிந்தவர்கள், அவர் மீது சந்தேகப்பட மாட்டார்கள். எந்த விளக்கமும் கேட்க மாட்டார்கள். வீரசாவர்க்கரை மிகைப்படுத்தி காட்ட வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல.
அவர் அந்தமான் சென்றிருந்தபோது, வீரசாவர்க்கர் இருந்த சிறை அறையை நேரில் பார்த்தார். 'புல்புல்' பறவை அந்தமான் சிறையில் அதிகளவில் உள்ளது. அவை அந்த சிறையில் ஒரு பகுதியாக காணப்படுகிறது. அதனால் எனது கணவர் அந்த பறவையை சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு யசோதா அம்மம்பலா தெரிவித்துள்ளார்.