காஷ்மீர்: பாதுகாப்புபடையினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் பலி


காஷ்மீர்: பாதுகாப்புபடையினர் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 2 வீரர்கள் பலி
x

காஷ்மீரில் இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்புபடையினர், காஷ்மீர் போலீசார் என 39 வீரர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்கம் நகரில் உள்ள ஃபரிஸ்லன் பகுதியில் இந்தோ- தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினரை ஏற்றிக்கொண்டு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ்சில் இந்தோ- தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் 37 பேர், ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 பேர் என மொத்தம் 39 வீரர்கள் பயணித்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சின் பிரேக் செயலிழந்துள்ளது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் ஆற்றின் கரையோரம் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story