நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும்-மத்திய மந்திரி நிதின் கட்கரி பேச்சு


நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும்-மத்திய மந்திரி நிதின் கட்கரி பேச்சு
x

நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

பெங்களூரு: நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அம்ருத் சரோவர்

மத்திய அரசின் தரைவழி போக்குவரத்துத்துறை சார்பில் திட்டத்தில் இருந்து நடவடிக்கை- ஸ்மார்ட், நிலையான சாலை கட்டமைப்பு திட்டங்கள், போக்குவரத்து மற்றும் சரக்கு சுற்றுச்சூழலுக்கான நெடுஞ்சாலைகளை உருவாக்குவது குறித்த 'மன்தன்' (ஆலோசனை) மாநாடு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு அம்ருத் சரோவர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் தரைவழி போக்குவரத்து துறை முக்கிய பங்காற்ற முடியும். மிஷன் அம்ருத் சரோவர் தட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் 75 நீா்நிலைகள் மேம்படுத்தப்படுகிறது.

தண்ணீர் பஞ்சம்

நான் மராட்டிய மாநிலத்தில் விதர்பா மண்டலத்தை சேர்ந்தவன். அங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயகளின் பிரச்சினைகளில் முக்கியமானது நீர் பற்றாக்குறை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால் ஆனால் இருக்கும் நீரை சரியான முறையில் பயன்படுத்த நீர் நிர்வாகம் தேவைப்படுகிறது.

நமது தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி ஏரிகளை உருவாக்க முடியும். நெடுஞ்சாலைகள் அமைக்க மண் தேவைப்படுகிறது. அந்த மண் ஒரு இடத்தில் இருந்து எடுத்தால் ஏற்படும் அகண்ட பள்ளத்தை பயன்படுத்தி புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியும். இந்த திட்டத்தால் நெடுஞ்சாலைகள் மட்டுமே அமைக்காமல் கிராமங்களில் ஏரிகளும் உருவாக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

36 ஏரிகள்

இந்திய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி நெடுஞ்சாலை திட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம் 36 ஏரிகள் மற்றும் 22 கிணறுகள் கிடைத்தன. இதுபோன்று புதுமையான முறையில் திட்டங்களை செயல்படுத்துவதால் திட்ட செலவு குறைவதுடன் மற்றவர்களுக்கும் உதவி கிடைக்கும். அதனால் மாநில மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், திட்ட செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக பொதுப்பணித்துறை மந்திரி எ.வ.வேலு உள்பட அனைத்து மாநிலங்களை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story