பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு பி.யூ.சி. மாணவி தற்கொலை
பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு பி.யூ.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரியில் பயலூரை சேர்ந்தவள் மைனர் பெண். ஹவுடலில் தனது அத்தை வீட்டில் வசித்து ஒரு கல்லூரியில் பி.யூ.சி. வணிகவியல் முதலாமாண்டு படித்து வந்தார். மைனர் பெண்ணின் பெற்றோர், பயலூரில் வசித்து வந்ததுடன் அதேப்பகுதியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான ஸ்ரீதர் பூரணிக் என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று மைனர் பெண் காது வலிப்பதாக கூறியதையடுத்து கல்லூரி நிர்வாகம் பெற்றோரை தொடர்புகொண்டு அழைத்து செல்லும்படி கூறியுள்ளது. ஆனால் ஸ்ரீதர் பூரணிக் வீட்டில் வேலை இருந்ததால் அவர்களால் கல்லூரிக்கு செல்லமுடியவில்லை. இதனால் அவர்கள், ஸ்ரீதர் பூரணிக்கை கல்லூரிக்கு சென்று மகளை அழைத்து வரும்படி கூறியுள்ளனர். ஸ்ரீதர் பூரணிக்கும், காரில் கல்லூரிக்கு சென்று மைனர் பெண்ணை அழைத்து வந்துள்ளார். அப்போது அவர், மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்து மைனர் பெண் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மைனர் பெண், அத்தை வீடு பகுதியில் உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மூடபித்ரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மைனர் பெண் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் மைனர் பெண், ஸ்ரீதர் பூரணிக் பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் பூரணிக்கை கைது செய்தனர்.