கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கலாமா?- பக்தர்கள் கருத்து
கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கலாமா? என்பதற்கு பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று
அறநிலையத் துறை கமிஷனருக்கு
உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
கர்நாடகத்தை பொறுத்தவரை கோவில்களில் செல்போன் எடுத்து செல்ல தடை என்பது ஒரு சில கோவில்களில் அமலில் உள்ளது. ஆனால் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
செல்போன்களை தவிர்ப்பது நல்லது
கோவில்களில் மக்கள், செல்போன்கள் பயன்படுத்துவது தொடர்பாக பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாறு:-
தினமும் கோவிலுக்கு சென்று வரும் பக்தரான ராஜாஜிநகரை சேர்ந்த கணேஷ் கூறுகையில், "கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாமியை மனம் உருகி வணங்குவதற்கு வருகின்றனர். அவர்கள் கோவில்களில் செல்போன் பேசுவதால், புகைப்படம் எடுப்பதால் மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாமியின் முழுமையான அனுகிரகம் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. பக்தர்கள் தாமாக அறிந்து செல்போன் பயன்படுத்துவதை கோவிலுக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும். கோவிலுக்கு வருபவர்கள் அவர்களது கஷ்டங்களை இறைவனிடம் கூறி நிவர்த்தி செய்வதற்காக வருகின்றனர். எனவே சாமியை வேண்டுவதில் மட்டும் அனைவரது கவனமும் இருக்க வேண்டும். என்னை கேட்டால் கோவில்களில், சொல்போன்களை தவிர்ப்பது அனைவரின் கடமையாகும்" என்றார்.
பொதுமக்களே தவிர்க்க வேண்டும்
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷியம் நகரை சேர்ந்த வி.சங்கர் கூறுகையில், "கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்ப்பது நல்லது. பலரும் பல கஷ்டங்களுடன் வந்து சாமியை தரிசிக்க கோவிலுக்கு வருகின்றனர். அப்போது அவர்களின் வேண்டுதல், இதுபோன்ற செயல்களால் தடைப்படுகிறது. மேலும், கோவிலின் புனித தன்மை கெடுகிறது. அதேசமயம், கோவிலுக்கு வரமுடியாமல் வீட்டில் இருக்கும் முதியவர்கள், குடும்பத்தினருக்கு கோவில் மற்றும் சாமி விக்கிரகத்தை புகைப்படம் எடுத்து சிலர் அனுப்புகின்றனர். அவர்கள் நல்ல எண்ணத்தில் தான் இதை செய்கிறார்கள். இதனால் வீட்டில் இருந்தபடி முதியவர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனாலும், இது மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளதால், கோவில் வளாகத்திற்குள் செல்போன் தடை செய்யப்படுவது மிகமுக்கியமான ஒன்றாகும்" என்றார்.
மங்களூரு டவுன் ெகாடிக்கால் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கூறுகையில், "தமிழகத்தில் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல கோர்ட்டு தடை விதித்து உள்ளதை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவை கர்நாடகத்திலும் அனைத்து கோவில்களிலும் கட்டாயம் கடைபிடிக்க வழிவகை செய்ய வேண்டும். மன அமைதிக்காக கோவிலுக்கு வந்துவிட்டு, அங்கு வைத்து செல்போனையே பார்த்து கொண்டிருப்பது ஏற்க முடியாது. ஒருவர் கோவிலுக்குள் வைத்து செல்போனை பயன்படுத்துவது, அவருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும். என்னை கேட்டால் கோவிலுக்குள் செல்போனை கொண்டு செல்வதே தவறு என்று தான் சொல்வேன். பொதுமக்கள் தாமாக முன்வந்து கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
சிவமொக்காவை சேர்ந்த பட்டதாரி பெண் அன்னபூர்ணேஸ்வரி என்பவர் கூறுகையில், "கோவில்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.சமுதாயத்தில் ஆண் அல்லது ெபண் யாராக இருந்தாலும் தங்களது மன சுமையை இறக்கி வைக்க கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுகிறார்கள். அங்கு அமைதியை தான் எதிர்பார்ப்போம். அங்கு செல்போனை பயன்படுத்தினால் மன அமைதியை கெடுப்பது போல ஆகிவிடும். இதனால் கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கலாம்" என்றார்.
தடை விதிக்க கூடாது
சிவமொக்காவில் வாகன பணிமனை வைத்திருக்கும் மூர்த்தி என்பவர் கூறுகையில், "கோவில்
களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு தடை விதிக்கலாமா என்ற விவகாரத்தில், தடை விதிக்க கூடாது என்பதே எனது கருத்து. கோவில்களுக்கு சாமி கும்பிட செல்லும் போது அமைதியை தேடுவது உண்மை தான். அதற்காக செல்போனை கொண்டு சென்றால் அமைதி கெடும் என்று சொல்ல முடியாது. கோவில்களுக்கு சென்று பழங்கால நினைவு சின்னங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ள செல்போன் தான் உதவுகிறது. காலம், காலமாக வழக்கத்தில் உள்ள செயலுக்கு தடை விதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை" என்றார்.
ஜாமர் கருவி பொருத்த வேண்டும்
ராஜாஜி நகர் 5-வது பிளாக்கில் உள்ள பால தண்டாயுதபாணி கோவில் நிர்வாகி லோகேஸ்வரி கூறியதாவது:- "கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும்போது, செல்போன்களில் புகைப்படம் எடுப்பது மிகவும் தவறு. இதனால் மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்களிடம் புகைப்படம் எடுக்காதீர்கள் என கூறினால், எங்களுக்கும், பக்தர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மன நிம்மதி கலைகிறது. இறைவனை வணங்குவதற்கு வரும்போது, செல்போன்களை பயன்படுத்துவதால், கவனம் இறைவனை விட்டு வேறு பாதையில் செல்கிறது. இதனால் அவர்களிடன் வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடும். சிலர் கோவில் உள்ளே நின்று கொண்டு சத்தமாக செல்போனில் பேசுகின்றனர். இது கோவிலில் உள்ள அமைதியை கெடுத்துவிடும். எனவே அனைத்து கோவில்களிலும் அரசு அனுமதியுடன் செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டால், ஓரளவு இதை கட்டுக்குள் கொண்டு வரலாம்" என்றார்.
ராஜாஜிநகரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் தலைவர் ஜே.பிரகாஷ் கூறுகையில், "சாமியை தரிசிக்க வரும் மக்கள் கோவில் கருவறையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் சிலையை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் அம்மனின் சக்தி குறைய வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களுக்கு அருள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. கோவிலில் உள்ள மற்ற விக்கிரகங்களை புகைப்படம் எடுக்கலாம், ஆனால் மூலஸ்தானத்தை புகைப்படம் எடுப்பது நல்லது கிடையாது" என்றனர்.