'பிக்பாஸ்' போட்டியாளர் மீது வழக்குப்பதிவு
‘பிக்பாஸ்’ போட்டியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் என்ற சுனாமி கிட்டி. இவர், கன்னட பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானார். மேலும் சுனாமி கிட்டி நடன கலைஞர் ஆவார். அவர், பல்வேறு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடன கலைஞராக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பப்புக்கு தனது நண்பர் சேத்தன் உள்பட சிலருடன் சுனாமி கிட்டி சென்றிருந்தார்.
அங்கு வைத்து குடிபோதையில் சுனாமி கிட்டி மற்றும் கிருஷ்ணா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தையில் திட்டியதுடன், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணா புகார் அளித்தார். அதன்பேரில், சுனாமி கிட்டி, சேத்தன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும், இதுதொடர்பாக கப்பன்பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருப்பதாகவும் சுனாமி கிட்டி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.