துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு, சி.பி.ஐ.க்கு பரிந்துரை: அசாம் அரசு


துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு, சி.பி.ஐ.க்கு பரிந்துரை:  அசாம் அரசு
x

எல்லையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, சி.பி.ஐ.க்கு பரிந்துரைத்து உள்ளோம் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறியுள்ளார்.



கவுகாத்தி,


வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவுக்கு இடையே மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் முக்ரோ என்ற இடம் இரு மாநில எல்லையாக உள்ளது. இந்த பகுதியில், திடீரென துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இதனால், இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில், அசாம் வன அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இன்று காலை முதல் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.

மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா துப்பாக்கி சூடு, உயிரிழப்பு சம்பவங்களை உறுதிப்படுத்தி உள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது. எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வகையில், மேற்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் ஆகிய மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம் எதிரொலியாக, அசாம் மற்றும் பிற மாநில பயணிகளுடன் வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாமின் கச்சார் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்கின்றனர்.

அதன்பின்பு மேகாலயாவுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மேகாலயா வாகன எண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று எஸ்.பி. நுமல் மஹத்தா கூறியுள்ளார்.

இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கூறும்போது, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டு, சி.பி.ஐ.க்கு பரிந்துரைத்து உள்ளோம். எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் போலீசார், வன துறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவது என்று அசாம் அரசு முடிவு செய்துள்ளது.


Next Story