பெங்களூருவில், இன்று முதல் காவிரி குடிநீர் வினியோகம்- அதிகாரி தகவல்
பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) முதல் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
பெங்களூரு: பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) முதல் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்தது
மண்டியா மாவட்டம் மலவள்ளி டி.கே.ஹள்ளியில் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நீரேற்று நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) உள்ளது. அங்கு பெய்த கனமழையால் நீரேற்று நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது.
அங்குள்ள வெள்ளத்தை அகற்றும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாது என கூறியிருந்தார்.
மக்கள் கடும் அவதி
ஆனால் வெள்ளத்தில் சேதமடைந்த நீரேற்று நிலையத்தை சரி செய்யும் பணி முடிவடையாததால் நேற்று பெங்களூரு மாநகரில் ராஜாஜிநகர், ஜெயநகர், ஸ்ரீராம்புரம், விஜயநகர் உள்பட மாநகர் முழுவதும் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
ஒரு பக்கம் மழையால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் குடிநீர் வராததால் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெங்களூருவில் 3 நாட்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்படாது என மக்கள் மத்தியில் பேசும்பொருளானது.
இன்று முதல் வினியோகம்
இதுகுறித்து பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, மண்டியாவில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
பெங்களூரு முழுவதும் நாளை (அதாவது இன்று) மதியத்திற்கு பிறகு காவிரி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.