லாலு பிரசாத் யாதவ் மனைவி மற்றும் மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை


லாலு பிரசாத் யாதவ் மனைவி மற்றும் மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
x
தினத்தந்தி 6 March 2023 6:17 AM GMT (Updated: 6 March 2023 7:34 AM GMT)

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மற்றம் அவரது மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக 2021-ஆம் ஆண்டில், யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டறிந்ததை அடுத்து, வழக்கை முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில், முன்னாள் முதல்வர் மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ மீண்டும் விசாரணை செய்து வருகிறது. குற்றப்பத்திரிகையின்படி, யாதவ் ரயில்வே மந்திரியாக இருந்தபோது நிலத்திற்குப் பதிலாக வேலை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


Next Story