பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உறுதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி சென்றுள்ளார். அங்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியை நாடாளுமன்றத்தில் அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார்.
அதனைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவையும் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன.
அதுகுறித்த பல முன்னேற்பாடுகள் வெளியுறவுத்துறையில் இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் பேசினேன். எப்படியெல்லாம் இணைந்து செயல்படலாம் என்பது பற்றி விவாதித்தோம்.
மதுரை வெளிவட்ட சாலை
நிதின் கட்காரியிடம் ஏற்கனவே ஒரு விழாவில் மதுரை வளர்ச்சி பணிகள் பற்றி கோரிக்கை விடுத்தேன். அவர் நேரில் வந்து பார்க்க சொன்னார். அதன் அடிப்படையில் தற்போது சந்தித்து, மதுரையில் வெளிவட்ட சாலைப்பணியை வேகப்படுத்த கேட்டுக்கொண்டேன்.
அதைப்போல மதுரை-கொச்சி 4 வழி சாலைப்பணி பற்றியும் பேசினேன். கடந்த 2018-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட அந்த வேலை இன்னும் தொடங்கவில்லை. உடனடியாக தொடங்க கோரிக்கை விடுத்தேன். அதுகுறித்த பல விளக்கங்களை அவர் கொடுத்தார்.
பணிக்கான வங்கி உத்தரவாதத்துக்கு பதில் காப்பீட்டு உத்தரவாதம் கொடுப்பது என்பன போன்ற விஷயங்களை முதல்-அமைச்சரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி செய்ய இருக்கிறேன்.
கோரிக்கைகள்
சிவில் விமான போக்குவரத்து மந்திரியிடம் 2 கோரிக்கைகள் விடுத்தேன். ஒன்று, அந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்கி கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்பது. மற்றொன்று விரிவாக்கப்பணிகளுக்கான கோரிக்கை. விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்த சுரங்கப்பாதை பணி ரூ.500 கோடிக்கு மேல் ஆவதால் நெடுஞ்சாலை போட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து முடிவு செய்து நிலம் ஒப்படைப்பையும் சீக்கிரமாக முடித்தால் உடனடியாக பணிகளை தொடங்க ஆவலாக இருப்பதாக மந்திரி தெரிவித்தார்.
பரந்தூர்
மேலும் அவராக முன்வந்து பரந்தூர் விமான நிலையம் பற்றியும் சொன்னார். பரந்தூர் விமான நிலையத்துக்கான கோப்புகள் வந்துள்ளன. அதையும் விரைவுப்படுத்தி பணிகளை செய்ய ஆவலாக இருக்கிறோம் என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார் என்று பழனிவேல் தியாகராஜன் கூறினார்.