கடலோர சுற்றுலா திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கடலோர சுற்றுலா திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

கடலோர சுற்றுலா திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார்.

மங்களூரு: மங்களூருவில் நடந்த ரூ.3,800 கோடி திட்ட தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:- இரட்டை என்ஜின் அரசின் வளர்ச்சி பணிகளால் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. புதிய மங்களூரு துறைமுகத்தில் ரூ.3,800 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதனால் மங்களூரு வளர்ச்சியில் வேகம் எடுக்கும். மேலும் துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் கர்நாடகத்தின் பங்கு அதிகரிக்கும்.

சுற்றுலாவை அதிகரிக்கும் நோக்கத்தில் கடலோர சுற்றுலா திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும். சாகர்மலா திட்டத்தின் கீழ் கார்வார் துறைமுகத்தில் ரூ.276 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி பணிகள் தொடங்கப்படுகின்றன. இதே போல் ஹொன்னாவர், குமடா துறைமுகங்களும் மேம்படுத்தப்படுகின்றன. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்காக அதிவிரைவு படகு வாங்க 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story