இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
x

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.

அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்திய கால்பந்து சம்மேளன விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28-ந் தேதி நடத்த நிர்வாக கமிட்டி ஏற்பாடு செய்து வந்தது. மாநில சங்க நிர்வாகிகளுடன், தலைசிறந்த முன்னாள் வீரர்கள் 36 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியதால் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) கடும் அதிருப்திக்குள்ளானது.

இந்த நிலையில் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும், மூன்றாம் தரப்பினர் செல்வாக்கு செலுத்துவது பிபா விதிமுறைகளை மீறிய தீவிர செயலாகும். இதனால் இந்திய கால்பந்து சம்மேளனம் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது என்று 'பிபா' நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

அதேநேரத்தில் இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகத்துக்கு உரிய முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்கும் முழு அதிகாரம் அவர்களுக்கு வரும் போது இந்த இடைநீக்கம் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தடை காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணி சர்வதேச போட்டி மற்றும் 'பிபா' வின் பயிற்சி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

இதற்கிடையே, இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் விவகாரம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.போபண்ணா, பரித்வாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் துஷர் மேத்தா, 'ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த 'பிபா'வுடன் மத்திய அரசும், நிர்வாக கமிட்டியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காணுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், 'இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கும், ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தினர்.


Next Story