குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டதை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் சிறுபான்மையினராக இருந்து மதரீதியில் பிரச்சினைகளை சந்தித்து இந்தியாவில் அகதிகளாக வாழும் இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், சமணம், புத்தம், ஜெயின், பார்சீ ஆகிய மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும். ஆனால், 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே, 4 ஆண்டுகளுக்கு பின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கடந்த 11ம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. மேலும், குறிப்பிட்ட 3 நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க மத்திய அரசு சிறப்பு இணையதள பக்கத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த இணையதள பக்கத்தின் மூலம் தகுதியானவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

அதேவேளை, குடியுரிமை திருத்தச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், இச்சட்டம் அமல்படுத்துவதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட 20 அமைப்புகள்/தனிநபர்கள் மனு தாக்கல் செய்தன. குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றார்.

மேலும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறுத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதிலளிக்க கால அவகாசம் தரும்படி மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story