கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; இந்தியாவில் ரூ.200 முதல் ரூ.400-க்குள் கிடைக்கும் - ஆதர் பூனவாலா தகவல்
இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை விற்பனைக்கு கிடைக்கச்செய்வது என இந்திய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் 15 முதல் 44 வயது வரையிலான பெண்களை மிக அதிக அளவில் தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளது.
இந்த புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை புனேயை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் உள்நாட்டில் உருவாக்கப்படும் முதல் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி என்ற சிறப்பை இது பெறுகிறது. இந்த தடுப்பூசியை உருவாக்கி இருப்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஜிதேந்திர சிங், இந்த தடுப்பூசியை மலிவு விலையில் சாமானிய மக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என தெரிவித்தார்.
இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி ஆதர் பூனவாலா பேசும்போது, இந்தியப் பெண்களுக்கு இந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் ரூ.200 முதல் ரூ.400-க்குள் கிடைக்கும் என தெரிவித்தார். இருப்பினும் அரசுடன் விவாதித்து விலை இறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 20 கோடி தடுப்பூசிகளை விற்பனைக்கு கிடைக்கச்செய்வது என இந்திய சீரம் நிறுவனம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.