மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்


மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 15 Dec 2023 8:19 AM GMT (Updated: 15 Dec 2023 8:57 AM GMT)

ஆறு முதல் எட்டு வாரங்களில் சந்திரசேகர ராவ் பூரண குணமடைவார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் பண்ணை இல்லத்தில் உள்ள குளியலறையில் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், இடதுபக்க இடுப்பு எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகர ராவ் நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை தேறியதை அடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர் ராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட அவர் நந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்வார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். மேலும் ஆறு முதல் எட்டு வாரங்களில் சந்திரசேகர ராவ் பூரண குணமடைவார் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு சென்று சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story