சுங்க கட்டண வசூலில் மாற்றம் - மத்திய அரசு திட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டண வசூலை முன்னெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு பதிலாக புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சுங்க கட்டண வசூலை முன்னெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடி கட்டண வசூலின் முறை குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரி சுங்க கட்டணம் வசூல் செய்ய இரண்டு வகை தொழில்நுட்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
அந்தவகையில் வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி செயற்கைகோள் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு வாகனம் சுங்கச் சாவடியை கடக்கும் போது வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து சுங்க கட்டணம் எடுக்கப்படும்.
இரண்டாவது வகை தொழில்நுட்பம் வாகங்களின் நம்பர் பிளேட் அடிப்படையில் செயல்படுகிறது. 2019 ஆண்டு முதல் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நம்பர் பிளேட்டுகள் உருவாக்கப்பட்டு வருவதாக நிதின் கட்கரி கூறினார்.
நெடுஞ்சாலைக்குள் ஒரு வாகனம் நுழைந்தபின் அதன் எண் சாஃப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து வாகனம் விலகும் புள்ளியும் பதிவு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலையில் அந்த வாகனம் பயணம் செய்த தூரம் துல்லியமாக கணக்கிடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது பாஸ்டேக் முறையில் நாடு முழுவதும் தினமும் சராசரியாக 120 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுவரை மொத்தம் 5.56 கோடி பாஸ்டேக் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 26 பசுமை நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும் என்று மந்திரி நிதின் கட்கரி கூறினார்.