விவசாயி கொலை வழக்கில் 15 நாட்களில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
விவசாயி கொலை வழக்கல் 15 நட்களில் கோர்ட்ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிவமொக்கா போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
சிவமொக்கா-
விவசாயி கொலை
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா முரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 52). விவசாயி. அதேப்பகுதியை சேர்ந்தவர் சித்தப்பா (35). இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி சித்தப்பா, திம்மப்பாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டதாக தெரிகிறது. இதனை திம்மப்பாவும் அவரது மனைவி லட்சுமியும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா, லட்சுமியையும், திம்மப்பாவையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் திம்மப்பாவும், அவரது மனைவி லட்சுமியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் திம்மப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதுகுறித்து சாகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவமொக்கா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சித்தப்பா தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கொலை நடந்த 15 நாட்களுக்குள் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு விரைந்து வழக்கை முடித்த போலீசாருக்கு சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.