நேபாள தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு!


நேபாள தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு!
x
தினத்தந்தி 17 Nov 2022 2:36 PM IST (Updated: 17 Nov 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தின் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நேபாளம் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நேபாளத்தில் நவம்பர் 20 அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏழு மாகாண சட்டசபைகளில் 550 உறுப்பினர் இடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், நேபாளத்தின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை ஏற்று, நவம்பர் 18 முதல் 22 வரை ராஜீவ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழு நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறது. ராஜீவ் குமார் தமது பயணத்தின் போது நேபாள தலைநகர் காட்மாண்டுவில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை நிறுவனம், இதுவரை 109 நாடுகளைச் சேர்ந்த 2200 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது. நேபாள தேர்தல் ஆணையத்தின் 25 அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 2023ம் ஆண்டு மார்ச் 13 முதல் 24 வரை இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

'உலகத் தேர்தல் அமைப்புகள் சங்கத்தின்' தலைமைப் பொறுப்பில் 2019 செப்டம்பர் முதல் இந்திய தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. ஏ-வெப் என்ற உலக தேர்தல் மேலாண்மை அமைப்புகள் சங்கத்தில் தற்போது 109 நாடுகளைச் சேர்ந்த 119 தேர்தல் மேலாண்மை அமைப்புகள் உள்ளன. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ஆசிய தேர்தல் ஆணையங்கள் சங்கத்தின் புதிய தலைமைப் பொறுப்புக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


Next Story