முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி சென்றார்
x
தினத்தந்தி 30 Nov 2022 1:49 AM IST (Updated: 30 Nov 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகம்-மராட்டியம் எல்லை பிரச்சினை வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேரில் சந்தித்து விவரங்களை வழங்கினார்.

பெங்களூரு:-

டெல்லி சென்றார்

கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லி செல்வதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி இருந்தார்.

அதன்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 7.40 மணியளவில் அவர் விமானம் மூலம் சென்றார். அங்கு காலை 10.30 மணியளவில் டெல்லி சென்றடைந்தார். அங்கு சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை அவர் நேரில் சந்தித்து, மராட்டியத்துடனான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு விவரங்களை வழங்கினார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வக்கீல் முகுல் ரோத்தகி

மராட்டிய மாநிலத்துடன் கர்நாடகத்திற்கு எல்லை பிரச்சினை உள்ளது. இதுகுறித்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை(இன்று) விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து வக்கீல்களை சந்திக்க நான் டெல்லி வந்தேன். சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியை நேரில் சந்தித்து பேசினேன். இந்த வழக்கில் அவர் கர்நாடகம் சார்பில் ஆஜராக உள்ளார். அவருக்கு இந்த பிரச்சினை குறித்த அனைத்து விவரங் களையும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் வழங்கியுள்ளார்.

அவரிடம் நானும் எல்லை பிரச்சினை குறித்த விவரங்களை வழங்கினேன். கர்நாடகம் தரப்பில் அனைத்து விவரங் களையும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க நமது வக்கீல்கள் தயாராகியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கை விசாரித்தார். அவர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதற்கு எதிராக மராட்டிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் தீவிரமாக உள்ளோம் என்பதை மராட்டிய மாநில தலைவர்கள் வெளிக்காட்டி கொள்கிறார்கள்.

42 கிராமங்கள்

ஒரு மாநிலத்தை சேர்ந்த பகுதிகள் இன்னொரு மாநிலத்துடன் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு ஏராளமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மராட்டிய எல்லைக்குள் உள்ள ஜாத் தாலுகாவில் 42 கிராமங்களை சேர்ந்த கன்னட மக்கள், தங்கள் கிராமங்களை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டு வருகிறார்கள். அங்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை என்று கூறி அவர்கள் இந்த கோரிக்கையை நீண்ட காலமாக வைத்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க உள்ளோம். சட்ட ஆலோசனைகளை பெற்று இந்த வழக்கில் கர்நாடகம் வாதங்களை முன்வைக்கும். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசியல் உள்நோக்கத்துடன் கருத்துகளை கூறியுள்ளார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது ஜாத் தாலுகா மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை அவர் ஏன் செய்யவில்லை. மராட்டியத்தில், கர்நாடக அரசு பஸ்களை தாக்கினர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story