மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல்- பதற்றம்-போலீஸ் குவிப்பு
சிருங்கேரி டவுனில் உள்ள மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிக்கமகளூரு: சிருங்கேரி டவுனில் உள்ள மசூதியில் காவி கொடி ஏற்றியதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவி கொடி விவகாரம்
சிக்கமகளூரு மாவட்ட சிருங்கேரி டவுன் பகுதியில் வருகிற 13-ந் தேதி தத்தா ஜெயந்தி விழாவை கொண்டாட இந்து அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக டவுன் முழுவதும் காவி கொடிகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வெல்கம் கேட் அருகே ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்த அர்ஜூன் என்பவர் தனது நண்பர்களுடன் வந்து அங்குள்ள மசூதி ஒன்றில் காவி கொடியை கட்டினார்.
இதை அந்த பகுதியில் வசித்து வந்த ரபீக் என்பவர் பார்த்துள்ளார். அவர் தனது நண்பர்களுக்கு தகவல் அளித்தார். திரண்டு வந்த மற்றொரு தரப்பினர், அர்ஜூன் மற்றும் அவரது நண்பர்களை மடக்கி பிடித்து காவி கொடியை அகற்றும்படி கூறினர். ஆனால் அதற்கு அர்ஜூன் மறுத்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து சிருங்கேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையில் தாக்குதலில் அர்ஜூன் மற்றும் ரபீக் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிருங்கேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தால் சிருங்கேரி டவுன் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சிருங்கேரி டவுன் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.