காணாமல்போன 4½ லட்சம் குழந்தைகள் மீட்பு - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி


காணாமல்போன 4½ லட்சம் குழந்தைகள் மீட்பு - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி
x

நாட்டில் காணாமல்போன சுமார் 4½ லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பெரும்பாலானோர் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

காணாமல்போன குழந்தைகள் உள்ளிட்டோர் குறித்த தேசிய வருடாந்திர விவாத நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

இணையதளம்

அதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும்விதமாக, அவர்களைப் பற்றி சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பதிவு செய்வதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் 'கோயா பாயா' இணையதளம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

குடும்பத்தில் ஒப்படைப்பு

அதன்பின், சுமார் 4½ லட்சம் குழந்தைகள் அதாவது 4 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 530 குழந்தைகளின் பெற்றோர் உறுதிசெய்யப்பட்டு, குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறார் நீதிச்சட்டத்திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கோர்ட்டுகளுக்கு பதிலாக மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு, தத்து கொடுக்கும் உத்தரவுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், 2 ஆயிரத்து 600 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

லாப நோக்கம் கூடாது

காணாமல்போகும் குழந்தைகள் உள்ளிட்டோரை கையாளுவோர், லாபம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படக்கூடாது.

குழந்தைகள் நலத்துறைக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த 2009-10-ம் ஆண்டில் வெறும் ரூ.60 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு அது ரூ.14 ஆயிரத்து 172 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story