உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பால் வெளுத்து வாங்கிய கனமழை: 4 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியின் சர்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. பல ஆறுகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேரிடர் மீட்புகுழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமத்தில் சிக்கி இருந்த மக்கள் அனைவரையும் மீட்டனர். சிலர் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் அடித்துச்செல்லப்பட்டதில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கானாமல் போனவர்களை அதிகாரிகள் தேடி வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.