மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி அமைச்சரவை மாற்றம்: மேலும் 7 மாவட்டங்கள் உதயம்
மேற்கு வங்காளத்தில் ஆகஸ்ட் 3ல் அமைச்சரவை மாற்றப்படும் என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் தொழில் துறை மந்திரியாக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து அவரது மந்திரி பதவியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பறித்தார்.
இந்நிலையில், கோல்கட்டாவில், மம்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் புதிதாக ஏழு மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்க மாநில அமைச்சரவை மாற்றப்படும். ஆனால் முற்றிலும் கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் திட்டமில்லை. அமைச்சரவையில் 4, 5 புதிய முகங்களை அறிமுகப்படுத்துவோம்.
3-ம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை 23ல் இருந்து 30 ஆக அதிகரிக்க உள்ளோம். புதிதாக சுந்தர்பன், இச்சிமதி, ராணாகாட், பிஷ்ணுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் ஒரு மாவட்டம் என ஏழு மாவட்டங்களை உருவாக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.