மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு


மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு
x

அருந்ததி படம் பார்த்து மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த கல்லூரி மாணவர் உடல்கருகி இறந்த சம்பவம் துமகூரு அருகே நடந்து உள்ளது.

துமகூரு:

மூடநம்பிக்கை

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், நாட்டில் சில இடங்களில் இன்னும் மூடநம்பிக்கை நடைமுறையில் உள்ளது. மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த பரிதாப சம்பவம் கர்நாடகத்தில் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 22). பி.யு.சி. 2-ம் ஆண்டு மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்து உள்ளார்.

மறுபிறவி எடுத்து விடலாம்...

அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.

இதில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரேணுகா பிரசாத் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்தி கொடுங்கள் என்று தந்தையிடம் கெஞ்சல்

மறுபிறவி எடுப்பதற்காக ரேணுகா பிரசாத் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடினார். அவரது நிலையை கண்டு தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரேணுகா பிரசாத் தனது தந்தையிடம் எனக்கு முக்தி கொடுங்கள், முக்தி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டார். அப்போது கண்ணீர்விட்டு அழுத தந்தை, ரேணுகா பிரசாத்திடம் நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று கூறினேன். நீ கேட்கவில்லை என்று கூறியதுடன், நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்றும் கூறினார். இந்த உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

1 More update

Next Story