விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
x

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தியையொட்டி கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மின் இணைப்பு

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது இயல்பு. சிலைகளை வைக்க அரசு அனுமதி வழங்குவது முக்கியமானது. இதனால் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இந்த அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அதனால் மாநகராட்சிகள் மற்றும் இதர நகர உள்ளாட்சி அமைப்புகளில் கீழ்கண்ட வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

விநாயகர் சிலைகளை வைக்க தேவையான இடம், பந்தல், மின் இணைப்பு போன்ற அனுமதிகளை வழங்க வருவாய்த்துறை, பொதுப்பணி, மின்சாரத்துறை, தீயணைப்பு மற்றும் போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டும். அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளும் வார்டுகளில் சிலைகளை வைக்க மேற்கண்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து அனுமதி வழங்க வேண்டும்.

3 நாட்களில் அனுமதி

சிலை வைக்க ஏற்பாடு செய்கிறவர்கள் உரிய படிவத்தில் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து 3 நாட்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கும் முன்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பவர்களிடம் ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவுகள் மற்றும் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் படிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பொது இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும். குறிப்பாக உயர்மின் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பாதையில் எக்காரணம் கொண்டும் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்க கூடாது. விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்களுடன் மத நல்லிணக்க கூட்டத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.


Next Story