மடாதிபதி மீது பொய் புகார் அளிக்க தூண்டிய வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்; சித்ரதுர்கா கோர்ட்டு வழங்கியது


மடாதிபதி மீது பொய் புகார் அளிக்க தூண்டிய வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன்; சித்ரதுர்கா கோர்ட்டு வழங்கியது
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மடாதிபதி மீது பொய் புகார் அளிக்க தூண்டிய வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு சித்ரதுர்கா கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சிக்கமகளூரு:

மாணவிகள் பலாத்காரம்

சித்ரதுர்கா மாவட்டத்தில் முருகா மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வந்தார். இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் சிலருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சில மாணவிகளை அவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

அந்த புகாரின் பேரில் சித்ரதுர்கா போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே மடத்தில் உள்ள மேலும் சில மாணவிகள் தங்களையும் மடாதிபதி பலாத்காரம் செய்ததாக புகார் கூறினர்.

இதையடுத்து முன்விரோதம் காரணமாக மடாதிபதி மீது மாணவிகளை ஏவி புகார் அளிக்க வைத்தது தெரிந்தது. இதையடுத்து விசாரணையில் முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன், அவரது மனைவி சவுபாக்கியா, உதவியாளர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்

மேலும், 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சித்ரதுர்கா சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சவுபாக்கியா ஜாமீன் கேட்டு மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை சித்ரதுர்கா கோர்ட்டில் நடைபெற்றது. அதனை விசாரித்த நீதிபதி, மடாதிபதி மீது பொய் புகார் அளிக்க மாணவிகளை தூண்டியதில் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது உதவியாளர் இருவரும் ஈடுபட்டனர்.

இதற்கு சவுபாக்கியா உடந்தையாக மட்டும் இருந்துள்ளார். எனவே சவுபாக்கியாவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார். எனினும் மற்ற 2 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story