டெல்லி காங்கிரஸ் தலைவர் பேச்சால் "இந்தியா" கூட்டணியில் சலசலப்பு: ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு


டெல்லி காங்கிரஸ் தலைவர் பேச்சால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு: ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Aug 2023 7:05 AM GMT (Updated: 17 Aug 2023 7:29 AM GMT)

டெல்லி காங்கிரஸ் தலைவர் பேச்சு, அம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி தலைவர்கள் பாட்னா மற்றும் பெங்களூரில் என இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போட்டியிடுவது, இட பங்கீடு எப்படி? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் மும்பையிலும் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை, 18 மாநில கட்சித் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பிறகு டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லம்பா, ''டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என எங்களுக்கு கூறப்பட்டது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. ஏழு தொகுதிகளுக்காக அனைத்து தொண்டர்களும் தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

டெல்லி காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு, ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி, கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால் இந்தியா கூட்டணி தேவையா? எனவும் கேள்வி எழுப்பியது. இதனால், உடனடியாக விளக்கம் அளித்த டெல்லி காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா, " கூட்டத்தில் சீட் பகிர்வு குறித்து ஆலோசிக்கப்படவில்லை. கட்சியை வலுப்படுத்துவது குறித்து மட்டுமே பேசப்பட்டது" என்றார். எனினும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சில நடவடிக்கைகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.


Next Story