காங்கிரஸ் கவுன்சிலர்கள்காலி குடங்களுடன் போராட்டம்


காங்கிரஸ் கவுன்சிலர்கள்காலி குடங்களுடன் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2023 5:30 AM GMT (Updated: 21 March 2023 5:31 AM GMT)

சிவமொக்கா மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் காலி குடத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவமொக்கா-

சிவமொக்கா மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் காலி குடத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

சிவமொக்கா மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வருபவர் சிவக்குமார். இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். மொத்தம் இந்த மாநகராட்சியில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிகப்படியாக பா.ஜனதாவை சேர்ந்தவர்கள், இருப்பதால், மேயர் பொறுப்பு இந்த முறை பா.ஜனதாவிற்கு கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி பொறுப்பு அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணவில்லை என்று கூறப்படுகிறது.

காலி குடங்களுடன் போராட்டம்

இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பகுதிகளில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சியில் காலி குடத்துடன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அதாவது மேயர் சிவகுமார் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்தது. அப்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து மேயர் பேச முயற்சித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கையில் காலி குடத்துடன் மேயர் இருக்கை முன்பு வந்தனர்.

24 மணி நேரம் குடிநீர்...

பின்னர் அவர்கள் சிவமொக்கா மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். குடிநீர் குழாயை திறந்தால் வெறும் காற்று மட்டும்தான் வருகிறது. இதற்கு முன்பு சில மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த குடிநீர் கூட கிடைப்பது இல்லை. இது குறித்து மக்கள் பல முறை எங்களிடம் கோரிக்கை வைத்துவிட்டனர். நாங்களும் மாநகராட்சி அதிகாரிகள், மேயர் முன்பு இந்த புகாரை கூறிவிட்டோம். ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. தற்போது குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இல்லையென்றால் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

தீர்வு காணப்படும்

இதை கேட்ட மேயர் அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-இந்த குடிநீர் தட்டுப்பாடு குறித்து நகராட்சி குடிநீர் வழங்கல்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story