பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயார்-டி.கே.சிவக்குமார் பேட்டி


பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயார்-டி.கே.சிவக்குமார் பேட்டி
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இட ஒதுக்கீடு வழங்கவில்லை

பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலை இந்த மாநில அரசு தயாரித்துள்ளது. அதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி நகர வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பா.ஜனதா அலுவலகம் என்று பெயர் பலகையை வைத்தனர். ஜனநாயகத்தில் அரசு செய்தது தவறு என்பதை நாங்கள் சொல்வது எங்களின் கடமை.

பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் மகளிருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கவில்லை. பொம்மனஹள்ளி தொகுதியில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயநகரில் 9 வார்டுகளில் 8 வார்டும், பி.டி.எம். லே-அவுட்டில் 8 வார்டுகளும், காந்திநகரில் 7-க்கு 7 வார்டுகளும், சாம்ராஜ்பேட்டையில் 6 வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றத்தை விரும்புகிறார்கள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள 93 வார்டுகளில் 76 வார்டுகள் மகளிருக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது நியாயமா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். பெங்களூருவில் நாங்கள் ஆய்வு நடத்தினோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் பசவனகுடி மற்றும் ராஜாஜிநகரில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறினர். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நெருங்கினோம். மாநகராட்சி தேர்தலில் அந்த தொகுதிகளில் பல வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் வாய்ப்புகளை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை சில பகுதிகளில் மட்டும் வழங்குவது என்பது அநீதி. வாக்காளர் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேசிய கொடி ஊர்வலம்

அதனால் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. வருகிற 15-ந் தேதி அன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா சிலையில் இருந்து பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானம் வரை தேசிய கொடி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story