காங்கிரஸ் பாதயாத்திரை; ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


காங்கிரஸ் பாதயாத்திரை; ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
x

காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்று, ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.



பர்வானி,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது.

முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆளும் இந்த மாநிலத்தில் மால்வா-நிமார் பிராந்தியத்தின் 380 கி.மீ. தொலைவை 12 நாட்களில் கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பர்வானி மாவட்டத்தில் கனஸ்யா கிராமத்தில் பழங்குடி விவகார துறையின் கீழ் வரும் அரசு முதன்மை பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ராஜேஷ் கன்னோஜே.

ராகுல் காந்தி பாதயாத்திரையாக பொர்காவன் மற்றும் ருஸ்டாம்பூர் பகுதிக்கு இடையே வந்தபோது, அவரை சந்தித்து ராஜேஷ் வில் மற்றும் அம்பு பரிசளித்து உள்ளார். தொடர்ந்து, பாதயாத்திரையிலும் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து மறுநாளான நவம்பர் 25-ந்தேதி அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவரம் சமூக ஊடகத்தில் விவாதபொருளானது. இதுபற்றி துறையின் உதவி ஆணையாளர் நிலேஷ் ரகுவன்ஷி கூறும்போது, முக்கிய பணி உள்ளது என கூறி விடுமுறை எடுத்து விட்டு, அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர், அது சார்ந்த புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவேற்றி உள்ளார். பணி விதிகளை மீறி, அரசியல் பேரணியில் ராஜேஷ் கலந்து கொண்டுள்ளார். இந்த விதிமீறலுக்காக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சி எம்.எல்.ஏ. பால பச்சன் கூறும்போது, ராகுல் காந்தி காங்கிரஸ் பாதயாத்திரையால் சிவராஜ் சிங் சவுகானுக்கு தூக்கமில்லா இரவுகளாகி விட்டன.

எத்தனை அரசு ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் பா.ஜ.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் எத்தனை பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என அவர் கேட்டுள்ளார். எனினும் இதுபற்றி முழுமையாக விவரிக்க ரகுவன்ஷி மறுத்து விட்டார்.


Next Story