காங்கிரஸ் பாதயாத்திரை: கட்சி கொடியை கம்பத்தில் கட்டிய 4 பேரை தாக்கிய மின்சாரம்


காங்கிரஸ் பாதயாத்திரை:  கட்சி கொடியை கம்பத்தில் கட்டிய 4 பேரை தாக்கிய மின்சாரம்
x

காங்கிரசின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கட்சி கொடியை கம்பத்தில் கட்டியபோது, 4 பேருக்கு மின்சாரம் தாக்கி உள்ளது.



மொகா,


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கர்நாடகாவில் இன்று காலை சங்கனக்கல்லு பகுதியில் 17-வது நாள் நடைபயணம் தொடங்கியது.

இந்த பாதயாத்திரையின் ஒரு பகுதியாக, சிலர் மொகா என்ற பகுதியருகே காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், 4 பேர் வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள், உடனடியாக பல்லாரி நகரில் நியூ மொக்கா பகுதியில் உள்ள நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தகவல் பற்றி அறிந்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக மாநில பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு உள்ளனர்.

கட்சி சார்பில் 4 பேருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபயணத்தின்போது, கட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


Next Story