பில்கிஸ் பானு வழக்கு: "பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?"- காங்கிரஸ் கேள்வி


பில்கிஸ் பானு வழக்கு: பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சிக்கு இன்னொன்றையும் சொல்வாரா?- காங்கிரஸ் கேள்வி
x

Image Courtesy: PTI 

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது. இந்த நிலையில் இவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

பிரதமர் மோடி நேற்று செங்கோட்டையில் பெண்கள் பாதுகாப்பு, சக்தி, அதிகாரம், மரியாதை குறித்து பேசியதை சுட்டிக்காட்டி பேசிய பவன் கேரா, "செங்கோட்டையிலிருந்து பெண்கள் பாதுகாப்பு, பெண்களின் சக்தி, பெண்களின் மரியாதை குறித்து பெரிய விஷயங்களை பிரதமர் பேசினார். சில மணி நேரங்கள் கழித்து குஜராத் அரசு பாலியல் பலாத்கார வழக்கு பின்னணியில் இருந்தவர்களை விடுவித்தது.

பிரதமரின் சொந்தக் கட்சியோ, அதன் அரசாங்கங்களோ அவர் சொல்வதைக் கேட்பதை நிறுத்திவிட்டதா?. பிரதமர் நாட்டுக்கு ஒன்றும், சொந்தக் கட்சி அரசுக்கு இன்னொன்றையும் சொல்வாரா?" என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் குஜராத் அரசு தனது உத்தரவை திரும்பப் பெற வேண்டும் அல்லது பிரதமர் மோடி தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.


Next Story