காங்கிரஸ் வழிகாட்டு குழு 4-ந் தேதி கூடுகிறது: நாடாளுமன்ற தொடருக்கான வியூகம் வகுக்க திட்டம்


காங்கிரஸ் வழிகாட்டு குழு 4-ந் தேதி கூடுகிறது: நாடாளுமன்ற தொடருக்கான வியூகம் வகுக்க திட்டம்
x

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு மாற்றாக அமைக்கப்பட்ட வழிகாட்டு குழு முதல்முறையாக 4-ந் தேதி கூடுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான வியூகம் வகுக்கப்படுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு மாற்றாக அமைக்கப்பட்ட வழிகாட்டு குழு முதல்முறையாக 4-ந் தேதி கூடுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான வியூகம் வகுக்கப்படுகிறது.

கடந்த மாதம், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். கார்கே வெற்றி பெற்றார்.

அவர் புதிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றவுடன், கட்சியின் முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான காரிய கமிட்டிக்கு மாற்றாக காங்கிரஸ் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டது.

காரிய கமிட்டியில் இடம் பெற்ற அனைவரும் வழிகாட்டு குழுவில் சேர்க்கப்பட்டனர். அதன் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், காங்கிரஸ் வழிகாட்டு குழு முதல்முறையாக டிசம்பர் 4-ந் தேதி கூடுகிறது. மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்குகிறார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 7-ந் தேதி தொடங்கி, 29-ந் தேதிவரை நடக்கிறது. அதில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் மாநாடு நடத்துவதற்கான தேதி, வழிகாட்டு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

அதில்தான், மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும். 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story