கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டி- சித்தராமையா அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டி-  சித்தராமையா அறிவிப்பு
x

சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவேன் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்: சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவேன் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

உற்சாக வரவேற்பு

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று கோலாருக்கு வந்தார்.

சொகுசு கேரவன் மூலம் கோலாருக்கு வந்த அவர், கோலாரம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கல்லூரி சர்க்கிளில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோலாருக்கு வந்த சித்தராமையாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுயர மாலை மற்றும் ஆப்பிள் மாைல அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோலார் நகரில் திறந்த வேனில் ஊர்வலமாக வந்தார்.

அப்போது வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு மலர் தூவி அவரை வரவேற்றனர்.

ஆலோசனை

இதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்ற சித்தராமையா அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள், கோலார் சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சித்தராமையாவை வற்புறுத்தி பேசினர். முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, முன்னாள் மந்திரி ரமேஷ்குமார் ஆகியோரும் கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சித்தராமையாவை கேட்டு கொண்டனர்.

இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலாரில் போட்டி

அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் வருணா, பாதாமி தொகுதியில் போட்டியிட மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் அதைவிட கோலார் மக்கள் என்மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்துள்ளனர். கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். மக்கள் மட்டுமின்றி சீனிவாசப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ்குமார், கோலார் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசகவுடா, பங்காருபேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நாராயணசாமி மற்றும் கே.எச்.முனியப்பா ஆகியோரும் என்னை கோலாரில் போட்டியிடுமாறு வலியுறுத்துகிறார்கள்.

இதனால் நான் அடுத்த ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.

குடிநீர் பிரச்சினை

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்தேன். சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் வளர்ச்சி பணிகளுக்காக நிதியை ஒதுக்கினேன். ஆனால் தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் சாதி, மத, கட்சி பார்த்து வளர்ச்சி நிதி ஒதுக்கப்படுகிறது. கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எனது ஆட்சியில் தான் எத்தினஒலே குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கோலார் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வேன். கோலார் மக்கள் எனக்கு ஆதரவு அளித்து பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எளிதில் வெற்றி பெறுவார்

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, கடந்த 2018-ம் ஆண்டு அந்த தொகுதியை தனது மகனுக்காக விட்டு கொடுத்துவிட்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதை அறிந்த அவர், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில் எதிர்பார்த்ததை போலவே சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவிய சித்தராமையா, பாதாமி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த ஆண்டு பாதாமி, சாமுண்டீஸ்வரி தொகுதியை விட்டுவிட்டு கோலார் தொகுதிக்கு சித்தராமையா தாவி உள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Next Story